செய்திகள்

விழுப்புரம் அருகே நள்ளிரவு 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு

Published On 2018-07-26 16:18 GMT   |   Update On 2018-07-26 16:18 GMT
விழுப்புரம் அருகே 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே சென்னை-கும்பகோணம் சாலையில் ஆனகவுண்டன் குச்சி பாளையம் உள்ளது. இந்த ஊர் வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு தமிழக அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்றது.

அப்போது அங்கு சாலையோரம் இருட்டில் மறைந்து நின்ற மர்ம மனிதர்கள் சிலர் கற்களை எடுத்து அந்த பஸ் மீது சரமாரியாக வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து அந்த பஸ் சென்று விட்டது.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று அதே ஆனகவுண்டன்குச்சி பாளையம் வந்தது. அப்போதும் மர்ம மனிதர்கள் அதன் மீதும் கற்களை வீசினர்.

இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. உடனே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

பின்னர் டிரைவரும், கண்டக்டரும் கீழே இறங்கி பஸ் மீது கல்வீசியவர்களை விரட்டினர். அதற்குள் அந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து 2 பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் வளவனூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

நள்ளிரவு ஒரே இடத்தில் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News