செய்திகள்

ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப கோரி வளநாடு அரசு பள்ளியில் பெற்றோர்கள் திடீர் போராட்டம்

Published On 2018-07-25 17:24 IST   |   Update On 2018-07-25 17:24:00 IST
வளநாடு அரசு பள்ளியில் ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்ப கோரி பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள தேனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 156 மாணவ, மாணவிகள்படித்து வருகின்றனர். இதில் மொத்தம் 6 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். ஆனால் ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மற்றொரு ஆசிரியையும் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர்.

இதையறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இன்று காலை பள்ளியில் திரண்டு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 156 மாணவ, மாணவிகள் படித்து வரும் பள்ளியில் 6 ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் ஏற்கனவே ஒரு ஆசிரியர் வேறு ஒரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு ஆசிரியை பணியிட மாற்றம் செய்யபட்டு உள்ளார்.

அவருக்கு பதில் உடனே மாற்று ஆசிரியரை பணியில் அமர்த்த வேண்டும், இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை (டிசி) தாருங்கள், நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உடனடியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதையடுத்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
Tags:    

Similar News