செய்திகள்

செங்கிப்பட்டி பகுதியில் ரூ.325 லட்சத்தில் 16 ஏரிகள் தூர்வாரும் பணிகள் ஆய்வு

Published On 2018-07-25 17:22 IST   |   Update On 2018-07-25 17:22:00 IST
விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று ரூ.325 லட்சம் மதிப்பீட்டில் செங்கிப்பட்டி பகுதிகளில் 16 ஏரியில் மேற்கொண்டுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தனர்.
பூதலூர்:

காவிரி டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக கல்லணையில் இருந்து 22-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதி முழுவதும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பி அதன் மூலம் பாசனம் பெற்று ஒரு போக சாகுபடி நடைபெறும்.

செங்கிப்பட்டி பகுதி ஏரிகளுக்கு புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்குண்டான் நீடிப்பு கால்வாய்களின் வழியாக தண்ணீர் நிரப்பப்படும். இந்த இரண்டு கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெற்று 77 ஏரிகள் நிரப்புவதன் மூலம் 10ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி நடைபெறும். கடந்த 7 ஆண்டுகளாக முறையாக தண்ணீர் கிடைக்காததால் இந்த பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இதனால் ஏரிகள் அனைத்தும் முட்புதர்கள் முளைத்து காணப்பட்டன.

இந்த ஏரிகள் அனைத்தையும் தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று திருச்சியை மையகமாக கொண்டு செயல்படும் பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு கோட்டத்தின் சார்பில் 16 ஏரிகள் ரூ.325 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி கரைகளை வலுப்படுத்தி மதகுகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூதலூர் ஒன்றியத்தில் செய்யப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி சுப்பையன் மற்றும் கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பார்வையிட்டனர். ராயமுண்டான்பட்டியில் மருவத்தி ஏரி, நெப்பி ஏரி ஆகிய ஏரிகளை தூர் வாரி கரைகளை உயர்த்தி இருக்கும் பணிகளையும், உய்யகுண்டான் நீடிப்பு கால்வாயில் ரூ.5 லட்சம் மதிப்பில் 3 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கும் பணிகள், புதிய கட்டளை மேட்டு கால்வாயில் ரூ.7 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள், மதகுகள் சீரமைப்பு, சிறிய அளவிலான குடிமராமத்து பணிகளை அதிகாரி சுப்பையன் ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் விரைவில் தரமாக முடிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளுடன் திருச்சி ஆற்று பாசன கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்இருந்தனர்.

அப்போது ஏரிகளின் கரைகளை உயர்த்தும் பணிகளும், ஆழப்படுத்தும் பணிகளும் சரியாக நடைபெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
Tags:    

Similar News