செய்திகள்

பரங்கிமலை ரெயில் நிலைய தடுப்பு சுவர் உயரம் குறைக்கப்படும்- ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் பேட்டி

Published On 2018-07-25 13:40 IST   |   Update On 2018-07-25 13:40:00 IST
பரங்கிமலை ரெயில் நிலைய 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் உயரம், அகலம் குறைக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வெறினார். #StThomasMountStation
ஆலந்தூர்:

பரங்கிமலை ரெயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரெயில்வே பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் இன்று வந்தார்.

சம்பவம் நடந்த 4-வது பிளாட்பாரத்தை ஆய்வு செய்தார். விபத்துக்கு காரணமாக கூறப்படும் பக்கவாட்டு சுவரை பார்த்தார். பின்னர் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ரெயில்வே நடைமேம்பாலத்தின் கீழே சென்று 40 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில்வே அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை.

பின்னர் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் உள்ள டிவிசனல் கோட்ட அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி பரங்கிமலை ரெயில் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம். பயணிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது.


படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் தங்கள் முதுகில் பைகளை தொங்க விட்டுக் கொண்டு வந்தது தான் விபத்திற்கான காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

பீக்அவர்சில் ரெயில்கள் அதிகளவு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் அதிகப்பட்சமாக 12 பெட்டிகளை கொண்டு ரெயிலை இயக்குவதற்குதான் அனுமதி உள்ளது.

கதவுகள் மூடப்பட்ட ரெயில் பெட்டிகளை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மும்பையில் தற்போது ஒரு சில ரெயில்கள் மூடப்பட்ட கதவுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

ரெயில் நிலையத்திற்கு மின்சார ரெயில் வந்த வேகம் சரியானதுதான். ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்று ரெயில் நிலையங்களிலும் பெட்டிகள் உள்ளேயும் ஒலிபெருக்கி, ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் மக்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் மிகக் குறைவு. ஆனால் அதனுடைய உயரம் மற்றும் அகலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது 4-வது பிளாட் பாரத்தில் சாதாரண மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிந்த பிறகு அறிவிக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

மின்தடை காரணமாகத் தான் பிளாட்பாரத்தை மாற்றி நேற்று மின்சார ரெயில் இயக்கப்பட்டது. அதற்கு பயணிகள் காலதாமதத்தால் அவதிப்படக்கூடாது என்பதற்காக இயக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் தான் முழுமையான விவரங்கள் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
Tags:    

Similar News