செய்திகள்

நெல்லையில் சாரல் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2018-07-24 10:07 GMT   |   Update On 2018-07-24 10:07 GMT
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. #NellaiRain
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இயல்பு நிலையை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அதிகம் மழை பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளை தவிர மீதமுள்ள 9 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதில் சிறிய அணைகளான அடவி நயினார், கொடு முடியாறு, குண்டாறு, கருப்பாநதி, ராமநதி, கடனாநதி ஆகிய 6 அணைகள் நிரம்பி வழிந்தது. பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய 3 அணைகளிலும் 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியது.

இதைத்தொடர்ந்து 9 அணைகளில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 381 ஹெக்டேர் நிலத்தில் கார் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லை. இன்று காலை அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 7 மில்லி மீட்டர் அளவுக்கும், கருப்பாநதி அணை பகுதியில் 1 மில்லி மீட்டர் அளவுக்கும் லேசான சாரல் மழை பெய்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே பெய்த மழை மற்றும் சாரல் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து நன்றாக விழுகிறது. அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1025.81 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீரும், கீழ் அணையில் இருந்து 1405 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 115.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 27கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. ஆனால் அணையில் இருந்து விவசாயத்துக்கு வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77.72 அடியாக உள்ளது.

இது போல கடனாநதி -83.50, ராமநதி-80.75, கருப்பாநதி-71.20, குண்டாறு-36.10, கொடு முடியாறு-46, அடவி நயினார்-130.75, வடக்கு பச்சையாறு-9.50, நம்பியாறு-11.51 அடியாக நீர்மட்டம் உள்ளது. #NellaiRain
Tags:    

Similar News