செய்திகள்

புதுவையில் சிறுமியை கற்பழித்த 5 பேர் கைது- 3பேருக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2018-07-22 10:59 IST   |   Update On 2018-07-22 10:59:00 IST
புதுவையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். #PondicherryGirlharassment
திருக்கனூர்:

புதுவை ரெட்டியார் பாளயத்தை சேர்ந்த 16 வயது சிறுமி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது பாட்டி வீடு விழுப்புரத்தில் உள்ளது. இவர் பாட்டி வீட்டுக்கு பஸ்சில் செல்லும் போது இவருக்கு வழுதாவூரை சேர்ந்த விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை திருக்கனூர் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் செல்போனில் ஆபாச படமெடுத்து அடிக்கடி மிரட்டி அந்த சிறுமியிடம் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.

ஒருகட்டத்தில் திருக்கனூர் பகுதியில் ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்த விக்கி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்கள் 7 பேருக்கு விருந்தாக்கினார். இதுகுறித்து அந்த சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் முறையிட்டனர். அவர்கள் தலையீட்டின் பேரில் இதன் மீது விசாரணை நடத்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா நடவடிக்கை எடுக்கும்படி திருக்கனூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் விக்கியுடன் சேர்ந்து சிறுமியை கற்பழித்தது அவரது நண்பர்களான கண்ணதாசன், முகிலன், சூர்யா, தேவா, கலை, மற்றொரு சூர்யா,அசோக் ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்கள் 8 பேரையும் தேடிவந்தனர். நேற்று இரவு திருக்கனூர் பகுதியில் பதுங்கி இருந்த விக்கி, முகிலன், கண்ணதாசன்,தேவா,சூர்யா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடிவருகிறார்கள். #PondicherryGirlharassment
Tags:    

Similar News