செய்திகள்

களக்காடு அருகே மின் வயர்கள் உரசியதால் தீ: வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம்

Published On 2018-07-20 14:57 GMT   |   Update On 2018-07-20 14:57 GMT
களக்காடு அருகே மின் வயர்கள் காற்றினால் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பொறி வைகோல் படப்பில் விழுந்ததால் தீ பிடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பெருமாள் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 54). தொழிலாளியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இதையொட்டி தனது தோட்டத்தில் இரு வைக்கோல் படப்புகள் வைத்திருந்தார். இதில் 200 கட்டுகள் இருந்தன. 

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு வைக்கோல் படப்பில் இருந்து கரும் புகை வந்தது. சிறிது நேரத்தில் படப்பு தீ பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ மள, மளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. 

இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் 200 வைக்கோல் கட்டுகளும் தீயில் கருகி நாசம் அடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் ஆகும். 

வைக்கோல் படப்பு இருந்த இடத்தின் வழியாக மின் வயர்கள் செல்கின்றன. மின் வயர்கள் காற்றினால் ஒன்றோடு ஒன்று உரசியதால் எழுந்த தீப்பொறி படப்பில் விழுந்ததால் வைக்கோல் படப்பில் தீ பிடித்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

இதேபோல் கீழப்பத்தை குளத்தின் அருகே உள்ள புதர்களிலும் மின் வயர்கள் உரசியதால் தீ பிடித்தது. அந்த தீயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Tags:    

Similar News