செய்திகள்

நிலக்கோட்டையில் மணல் லாரியை கண்டித்து கிராமத்தினர் மறியல்

Published On 2018-07-19 17:27 GMT   |   Update On 2018-07-19 17:27 GMT
நிலக்கோட்டை அருகே விபத்து ஏற்படுத்திய மணல் லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகையாற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் லாரியை சிறைபிடித்து இரவு முழுவதும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே இருந்தது.

மேலும் மணல் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இன்று காலை அசுர வேகத்தில் வந்த மணல் லாரி குண்டலப்பட்டி பிரிவு அருகே சாலையோரம் நடந்து சென்ற திருப்பதி மனைவி சாத்தாவு(வயது43) என்ற பெண் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்த அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அணைப்பட்டி- நிலக்கோட்டை சாலை குண்டலப் பட்டிபிரிவு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்து விரைந்து சென்ற விளாம்பட்டி இன்ஸ் பெக்டர் சுகு மாறன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கிராமமக்கள் சார்பாக 3 கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பகுதியில் தொடர்ந்து வரும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News