செய்திகள்

கல்லூரி மாணவி பலி: போலி பயிற்சியாளரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Published On 2018-07-18 02:58 GMT   |   Update On 2018-07-18 02:58 GMT
மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்தில் கைதான போலி பயிற்சியாளரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. #coimbatorestudentdied
கோவை:

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் விராலியூரில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து கீழே விரிக்கப்பட்டு இருந்த வலையில் குதிக்க தயங்கிய மாணவி லோகேஸ்வரியை (வயது 19), பயிற்சியாளர் ஆறுமுகம் (31) பிடித்து தள்ளினார்.

இதில் அவர் கீழே விழுந்தபோது முதலாவது மாடியில் உள்ள ‌ஷன் சேடில் தலை மோதியதில் படுகாயம் அடைந்ததால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், ஆறுமுகம் மீது தெரிந்தே மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரை கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுகம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அவர் போலி சான்றிதழ் பெற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியை நடத்தி வந்தது தெரியவந்தது.

போலி பயிற்சியாளரான ஆறுமுகத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அப்போது போலீசார் ஆறுமுகத்தை பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கண்ணன், ஆறுமுகத்தை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்ததுடன் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து ஆலாந்துறை போலீசார் ஆறுமுகத்தை போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வைத்து போலி சான்றிதழ் தயாரித்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, ‘ஆறுமுகத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #coimbatorestudentdied
Tags:    

Similar News