செய்திகள்

முத்துப்பேட்டை தெற்குக்காடு மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2018-07-16 12:20 GMT   |   Update On 2018-07-16 12:20 GMT
முத்துப்பேட்டை தெற்குக்காடு மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்றனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத திருவிழா தொடங்கியது. முதல் நாளன்று கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி அம்பாள் விக்கிரகம் எடுத்துவரப்பட்டது. மறுநாள் அம்பாளுக்கு சந்தனகாப்பும் திருவிளக்கு பூஜையும் நடந்தது. மூன்றாம் நாள் சிறப்பு அபிசேக ஆராதனையும் வழிபாடுகளும் நடந்தது.

இதேபோல் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில் நிறைவு நாள் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காலை திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள வெள்ளக்குளத்திலிருந்து ஏராளமான பெண் பக்தர்கள் பால் குடம் எடுத்து சென்றனர். பின்னர் பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். 

காவடி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய வழியாக சென்று கோவிலை அடைந்தது. பின்னர் மதியம் கோவிலில் அபிஷேக ஆராதனை, வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக்காப்பு கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நடைபெற்றது. பின்னர் நேற்று இரவு அம்மன் வீதி ஊர்வலம் வாண வேடிக்கையுடன் தொடங்கி முக்கிய பகுதிகளுக்கு சென்றது. அப்பொழுது குமரன் பஜார் அருகே அம்மனுக்கு வரகரிசி மாலை போட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாமி ஊர்வலம் கோவிலை சென்றடைந்து திருவிழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம வாசிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News