செய்திகள்

8 வழி சாலைக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் கொடுக்கவில்லை - நெடுஞ்சாலை ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்

Published On 2018-07-13 05:58 GMT   |   Update On 2018-07-13 05:58 GMT
8 வழி சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று நெடுஞ்சாலை ஆணையம் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.#Greenwayroad

சென்னை:

சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியில் திட்டமிட்டுள்ளது.

இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலம் அளவீடு பணி 90 சதவீதம் முடிந்து விட்டது. தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் நில அளவீட்டு பணியை அதிகாரிகள் மேற் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு அனுமதி கேட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் ஆணைய நிபுணர்கள், அதிகாரிகள் அந்த வழித்தடம் அமைய உள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது 8 வழி சாலை திட்டம் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு வனப்பகுதியில் செல்வது தெரிய வந்தது. அந்த வனப் பகுதிகள் வன விலங்குகள் வழித்தடங்கள் உள்ள பகுதியாகும். குறிப்பாக கல்வராயன் வனப் பகுதியில் அந்த வழிதடம் செல்வது தெரிய வந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிக்காத படி அந்த பாதையை அமைக்கும்படி சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக கல்வராயன் மலை வனப்பகுதியை தவிர்க்க கூறியுள்ளது.

நெடுஞ்சாலை அமைக்க நீர் நிலைகள், சதுப்பு நிலங்கள் பாதிக்கப்பட கூடாது. வனப் பகுதியில் சில இடங்களை தவிர்க்க கூறியுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்னும் அனுமதி தர வில்லை.

சில பரிந்துரைகளை பூர்த்தி செய்யும்படி சுற்றுச் சூழல் அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் 8 வழி சாலை அமைக்க எந்த விதி மீறல்களும் செய்யப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Greenwayroad

Tags:    

Similar News