செய்திகள்

திருட்டு நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-12 23:25 GMT   |   Update On 2018-07-12 23:25 GMT
வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை வாங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

போலீசாரின் பணி நேரத்தை வரையறை செய்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

இதுதொடர்பான வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். அப்போது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில், வேலை செய்ய பல போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஆர்டர்லியாக பணி செய்யும் போலீசார் எத்தனை பேர் உள்ளனர்? என்று அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக டி.ஜி.பி., ஆர்டர்லி முறை பல ஆண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது போலீசார் வீட்டில் ஆர்டர்லியே கிடையாது என்று பதில் மனு தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கினால் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வார விடுமுறை வழங்குவது குறித்து ஒரு குழுவை அமைத்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, போலீஸ் நிலை ஆணையின்படி, வாரம் ஒருநாள் போலீசாருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. சிலர் அந்த விடுப்பு வேண்டாம் என்று கூறி பணிக்கு வந்து, அந்த கூடுதல் பணி நேரத்துக்கு ரூ.200 பெற்றுக்கொள்கின்றனர் என்று கூறினார்.

அதற்கு நீதிபதி, ‘வாரம் ஒருநாள் விடுப்புக்கு இப்படி ரூ.200 கொடுத்தால், எந்த போலீஸ்காரரும் வாரவிடுப்பு எடுக்க மாட்டார்கள். அதனால், மாதம் ஒரு முறைதான் இவ்வாறு பணி செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை அரசு உருவாக்க வேண்டும். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த வக்கீல் சூரியப்பிரகாசம், “தமிழகத்தில் வழிப்பறி சம்பவம், குறிப்பாக செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. படிக்கும் இளைஞர்கள் பலர் இந்த வழிப்பறி செயலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பெண்களிடம் இருந்து அறுத்து செல்லும் தங்க செயினை வாங்கும் நபர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதுநாள் வரை ஆயிரக்கணக்கான வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் செயினை வாங்கும் நபர்கள் ஒருவரை கூட போலீசார் கைது செய்வது இல்லை. அதனால், வழிப்பறிச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது” என்று கூறினார்.

இதற்கு நீதிபதி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை உபயோகிப்பதும்தான் காரணம். போலீசார் மீதுதான் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார் குற்றவாளிகளுடன் கைகோர்த்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அதனால், வழிப்பறி கொள்ளையர்களிடம் இருந்த தங்க நகைகளை வாங்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் நல ஆணையம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதை தமிழக அரசு தெரிவிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். 
Tags:    

Similar News