செய்திகள்

பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்தது

Published On 2018-07-11 14:00 GMT   |   Update On 2018-07-11 14:00 GMT
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை நீர் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து வருவதால் நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி அதிகரித்தது.
ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு வெறும் 500 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கடந்த 7-ந் தேதி இரவு முதல் நீலகிரி மலை பகுதியில் பரவலாக மழை பெய்வதால் அணைக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

8-ந் தேதி முதல் பருவமழை மேலும் தீவிரம் அடைந்ததாலும், பில்லூர் அணை நிரம்பியதாலும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்ந்தது.

படிப்படியாக நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்தது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி நீர்மட்டம் 81.50 அடியாக உள்ளது. அதாவது ஒரே நாளில் 1½ அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி தண்ணீரும், கீழ் பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய்களின் கீழ்பாசனம் பெறும் நிலங்களுக்கு நாளை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சி கொடிவேரி அணை பகுதியில் நாளை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தண்ணீர் திறந்து வைக்கிறார். மாவட்ட கலெக்டர் பிரபாகர் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
Tags:    

Similar News