செய்திகள்

மதுரை ஆதீனம் வழக்கில் நித்யானந்தாவையும் சேர்க்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-10 22:33 GMT   |   Update On 2018-07-10 22:33 GMT
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பினராக சேர்க்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை ஆதீனமடத்தின் 292-வது மடாதிபதியாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்தநிலையில் மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.



இதற்கிடையே மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தாவை அருணகிரிநாதர் நீக்கினார். இதுதொடர்பான வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த கோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி தொடர்பான வழக்கில் என்னையும் ஒரு தரப்பினராக சேர்க்கக்கோரிய மனுவை மதுரை சப்-கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, அந்த வழக்கில் என்னை ஒரு தரப்பினராக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், மதுரை ஆதீன இளைய மடாதிபதி தொடர்பாக மதுரை முதன்மை சப்-கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் நித்யானந்தாவை ஒரு தரப்பாக சேர்க்க அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News