செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை

Published On 2018-07-10 12:16 GMT   |   Update On 2018-07-10 12:16 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். #Thoothukudi #Sterlite
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கலவரம் தொடர்பாக 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை விசாரணைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி நேற்று விசாரணைக்காக பலர் வந்திருந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி சாட்சிகளை பதிவு செய்தனர். இன்று 2-வது நாளாக காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் 10-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், துணைக் கண்காணிப்பாளர் அணில்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, காயமடைந்த அனைவரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

வழக்குகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்களை சேகரித்து உள்ளனர். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீசாரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மேலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் ரத்தக் கறை படிந்த உடைகள், உடலில் பாய்ந்த துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் தடயங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான போலீசார், தாங்கள் சேகரித்த தடயங்களை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சங்கர் முன்னிலையில் தலைமை எழுத்தரிடம் ஒப்படைத்தனர்.

இந்த தடயங்கள் அனைத்தும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்படும் என தெரிகிறது. இதேபோல துப்பாக்கி சூடு தொடர்பான கள ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள், துப்பாக்கிக்கள் போன்றவையும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. #Thoothukudi #Sterlite
Tags:    

Similar News