செய்திகள்

பழனி கோவிலில் தீ விபத்து- ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ரகசிய விசாரணை

Published On 2018-07-06 18:02 IST   |   Update On 2018-07-06 18:02:00 IST
பழனி கோவில் அலுவலகத்தில் நடந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ரகசியமாக விசாரணை நடத்தி சென்றார்.
பழனி:

பழனி கோவில் சிலை மோசடி வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஐகோர்ட்டு நீதிபதியிடமே பொன்மாணிக்கவேல் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. கருணாகரன் இடமாற்றம் செய்யப்பட்டார். இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலை மோசடி வழக்கில் முக்கிய புள்ளிகளை தப்பவைப்பதற்காக அதிகாரிகள் மாற்றப்பட்டதாக சந்தேகம் எழுந்தது.

இதனிடையே நேற்று முன்தினம் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு முக்கிய ஆவணங்கள் எரிந்ததால் பக்தர்களின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

நேற்று ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் பழனி மலைக்கோவிலுக்கு வந்தார். பலத்த சூறாவளி காற்று வீசியதால் ரோப் கார் இயக்கப்படவில்லை. இதனால் வின்ச் மூலம் மலைக்கோவில் வந்தார். மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திருஆவினன்குடி கோவிலிலும் வழிபாடு செய்தார்.

தனது மகளுக்கு ஆகஸ்டு 31-ந் தேதி திருமணம் நடைபெறுவதை முன்னிட்டு வழிபாடு செய்ய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் கோவில் அலுவலகத்தில் தீ விபத்து நடந்த விபரம் குறித்து அதிகாரிகளிடம் ரகசிய விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

இந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எதுவும் எரிந்ததா? எனவும் விசாரித்து சென்றுள்ளார். ஆனால் நேற்று இரவே மதுரைக்கு சென்று விட்டார். இதனால் தீ விபத்து தொடர்பாக நடந்த விசாரணை குறித்த முழுமையான விபரம் தெரியவில்லை. #tamilnews
Tags:    

Similar News