கண்டக்டர் இல்லாத பஸ் சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம் - சி.ஐ.டி.யு. ஊழியர் சங்க மாநில தலைவர்
கோவை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கோவை மண்டலம் சார்பில், கோவையில் இருந்து சேலத்துக்கு இடைநிறுத்தம் மற்றும் கண்டக்டர் இல்லாமல் 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. நேற்று முதல் கூடுதலாக 6 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் ஏறியவுடன் டிக்கெட் கொடுத்து விட்டு கண்டக்டர் இறங்கிக் கொள்வார். இடையில் எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் செல்வதால் பயணநேரம் மிச்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக சி.ஐ.டி.யு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை ரத்து செய்ய வேண்டும். ‘கண்டக்டர் இல்லாத பஸ் சேவை அடுப்பில்லாமல் சமைப்பதற்கு சமம்’. சிக்கனம் என்ற பெயரில் கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை அரசு தொடங்கி உள்ளது. ஆனால் இந்த சேவை பயன் அளிக்காது.
கண்டக்டர் இல்லாத பஸ் சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சங்க ஊழியர்கள் பஸ்களை இயக்குவதற்கு முன்பு கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய பின்னர் பணிக்கு செல்வார்கள்.
தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின்படி கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்க முடியாது. மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்த போதுபாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் அடக்கு முறை பின்பற்றப்படுவதை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
போக்குவரத்து கழக மானியக் கோரிக்கையில் அரசுப் போக்குவரத்து கழகத்தை மேம்படுத்துவது, ஊழியர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பது குறித்து அமைச்சர் பேச வில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.5 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #BusConductor