செய்திகள்

லோக் ஆயுக்தா மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் - சட்டசபையில் ஓபிஎஸ் தகவல்

Published On 2018-07-05 11:03 GMT   |   Update On 2018-07-05 11:03 GMT
முதல்வர், அமைச்சர் ஆகியோர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வரும் லோக் ஆயுக்தா மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார். #Lokayukta #TNAssembly
சென்னை:

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசு சார்பில் கடந்த ஏப்ரலில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ‘லோக் ஆயுக்தா, லோக்பால் தொடர்பாக மத்திய அரசு சில சட்டத் திருத்தங்கள் கொண்டுவர உள்ளதால், அதைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா அமைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், உடனடியாக லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டது.

இதனால், இந்த சட்டசபை கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். இன்னும், 2 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடக்கும் என்பதால் இன்று மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இன்று இது தொடர்பாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக் ஆயுக்தா மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். இதனால், நாளை மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 
Tags:    

Similar News