செய்திகள்

விருத்தாசலம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2018-07-04 15:01 GMT   |   Update On 2018-07-04 15:01 GMT
குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள வி.சாத்தப்பாடி கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக சாத்தப்பாடி ஊராட்சி சார்பில் ஆழ்துளை மோட்டாருடன் கூடிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் ஆழ்துளை மோட்டார் பழுதானது. இதனால் புதிய ஆழ்துளை மோட்டார் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில வாரங்களாகவே மிகவும் கலங்கலாக வருகிறது. இந்த நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இது குறித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த வி.சாத்தப்பாடி கிராம பெண்கள் இன்று காலை அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்-பரங்கிபேட்டை சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டனர். அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கலங்கலாக வருவதை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்த தாசில்தார் ஸ்ரீதரன் மற்றும் கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் பள்ளி, கல்லூரி வேன் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News