செய்திகள்

நீதிபதியை விமர்சித்த விவகாரம்- தங்க தமிழ்ச்செல்வன் மீது மேலும் ஒரு வக்கீல் வழக்கு

Published On 2018-07-03 14:44 IST   |   Update On 2018-07-03 14:44:00 IST
நீதிபதிகளை விமர்சித்த விவகாரத்தை எதிர்த்து மேலும் ஒரு வக்கீல், தங்க தமிழ்ச்செல்வன் மீது சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை:

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர்.

அந்த தீர்ப்பை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்தார்.

தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துக்கள் நீதிபதிகளை மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் மீது ஸ்ரீமதி என்ற பெண் வக்கீல் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து இதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயணன் நோட்டீசு அனுப்பியுள்ளார். இந்த வழக்கை எதிர்கொள்ள தயார் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறி இருந்தார்.

இந்த நிலையில் நீதிபதிகளை விமர்சித்த விவகாரத்தை எதிர்த்து மேலும் ஒரு வக்கீல், சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். பயிற்சி வக்கீலான அவரது பெயர் பி.கண்ணன். அவர் நேற்று தனது மனுவை தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் முதல் டிவிசன் பெஞ்ச் அளித்த தீர்ப்பை தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்தது தவறாகும். எனவே அவர் மீது கோர்ட்டு கிரிமினல் அவமதிப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வக்கீல் கண்ணனின் மனுவை அரசு தலைமை வக்கீல் விஜய்நாராயணன் ஏற்றுக்கொண்டார். தங்க தமிழ்ச்செல்வனுக்கு அவர் மீண்டும் ஒரு நோட்டீசு அனுப்பியுள்ளார்.

அதில் அவர், “நீதிபதிகளை விமர்சித்தது பற்றி 10-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். #ThangaTamilselvan
Tags:    

Similar News