செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு நான் ஆதரவளிக்கவில்லை - சத்குரு ஜகி வாசுதேவ் விளக்கம்

Published On 2018-07-02 09:35 GMT   |   Update On 2018-07-02 09:35 GMT
ஸ்டெர்லைட் ஆலைக்கு தான் ஆதரவளிக்கவில்லை என்றும் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் விளக்கம் அளித்துள்ளார். #JaggiVasudev #Sterlite
சென்னை:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சத்குரு ஜகி வாசுதேவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவுகளை சுட்டிக்காட்டி ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘ஸ்டெர்லைட் ஆலை’ விவகாரம் தொடர்பாக சத்குரு தெரிவித்த கருத்துக்கள் சில ஊடகங்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு செய்தியாக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் மத்தியில் ஒரு தவறான பிம்பம் ஒன்று உருவாகி வருகிறது. குறிப்பாக, வன்முறை சம்பவத்தில் 13 பேரின் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவிக்காமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உருவாக்கியதாக கூறப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சத்குரு அவர்கள் குரல் கொடுப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த பார்வை முற்றிலும் தவறானது.

துப்பாக்கி சூடு நடந்த மறுநாளே குரல் கொடுத்தார் சத்குரு. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மே 22-ம் தேதி நடைபெற்றது. அதன் மறுநாளான மே 23-ம் தேதி கோவை விமான நிலையத்தில் சத்குரு, தந்தி டி.வி. நிருபரின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அந்த பதிலில், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. நம் நாட்டு மக்களை நாமே கொல்லக்கூடாது. இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டறிய வேண்டும். இந்த பிரச்சினையை அரசியல் ஆக்கக்கூடாது. சாமானிய மக்களும் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகவே, இந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது” என்று சத்குரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், மக்களின் பாதிப்புகளை உணராமல் சத்குரு ‘ஸ்டெர்லைட் ஆலை’-க்கு ஆதரவாக பேசி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சத்குரு கருத்து தெரிவித்துள்ளார்.



ஸ்டெர்லைட் ஆலை’ விவகாரம் தொடர்பாக சத்குரு தெரிவித்த கருத்துக்களின் ஒட்டுமொத்த சாராம்சம்:

‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆழ்ந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. நம் மக்கள் கொல்லபட்டுள்ளனர், இனி ஒரு சம்பவம் இவ்வாறு நிகழக்கூடாது. அந்த சம்பவத்தில் சாமானிய மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கருதவில்லை. அரசியல் ஆசை கொண்ட சில குழுக்கள் மக்களை பலிகடா ஆக்கியுள்ளதாகவே கருதுகிறேன்.  நான் ஸ்டெர்லைட் ஆலைக்கோ வேறு தொழிற்சாலைக்கோ அரசியல் கட்சிக்கோ ஆதரவளிக்கவில்லை. சுற்றுச்சூழல் அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள். பொது உடைமைகளை எரிப்பதோ, தொழிற்சாலைகளை அடைப்பதோ தேசத்திற்கு நன்மை பயக்காது. இதை அரசியலாக்காதீர்கள், நாம் உயிர்களை இழந்துள்ளோம். இத்தகைய சம்பவங்கள் இனி நிகழாதிருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #JaggiVasudev #Sterlite
Tags:    

Similar News