செய்திகள்

விபத்தை தடுக்க - அதிவேகமாக வாகனம் ஓட்டிய 18 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

Published On 2018-06-29 10:42 GMT   |   Update On 2018-06-29 10:42 GMT
அதிவேகமாக வாகனம் ஓட்டிய 18 பேரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூரில் உள்ள ஏரியில் சவுடு மணல் எடுப்பதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இங்கிருந்து எடுக்கப்படும் சவுடு மணல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனால், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தினமும், 500-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் அசுர வேகத்தில் சென்று வருகின்றன. மேலும் சவுடு மணல் கொண்டு செல்லும் லாரிகள் தார் பாய் போடாமல் செல்வதால் பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். லாரிகள் வேகமாக செல்வது குறித்து மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு ஏராளமான புகார் வந்தது.

அவரது உத்தரவுப்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் மற்றும் பறக்கும் படை ஆய்வாளர்கள் பட்டரைபெருமந்தூர் சுங்கசாவடி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அதிவேகமாக லாரி, கார் உள்ளிட்ட வாகனத்தை இயக்கிய 18 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து 19,000ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 18 பேரின் உரிமம் தற்காலிகமாக ரத்தும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.#Tamilnews

Tags:    

Similar News