செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உள்பட 5 பேர் கைது

Published On 2018-06-29 10:01 GMT   |   Update On 2018-06-29 10:01 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ்குமார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 மர்ம நபர்கள் கமலேஷ் குமாரை கத்தி முனையில் மிரட்டி, பணம், செல்போனை பறித்து சென்றனர்.

இது குறித்து கமலேஷ் குமார் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தார்.

இந்த நிலையில் போந்தூர் டாஸ்மாக் பாரில் சந்தேகத்திற்கிடமான 5 பேர் மது அருந்துவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடுவீரபட்டு பகுதியை சேர்ந்த நரேஷ்பாபு, சுரேஷ்பாபு, மாடம்பாக்கத்தை சேர்ந்த பரத், ஆனந்த், தாம்பரத்தை சேர்ந்த ஐசக் என்பதும், கத்தி முனையில் வழிப்பறி, நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதில் நரேஷ்பாபு என்பவர் பிரபல ரவுடியான நடுவீரபட்டு லெனினின் கூட்டாளி ஆவார்.

கைதான 5 பேரிடம் இருந்து 4 கத்தி, ரூ. 3 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News