செய்திகள்

ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷனுக்காக 8 வழி சாலை அமைக்கப்படுகிறது: திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2018-06-28 09:57 GMT   |   Update On 2018-06-28 09:57 GMT
ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷனுக்காக சென்னை- சேலம் 8 வழி சாலை அமைக்கப்படுகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #chennaisalem8wayproject

தாம்பரம்:

காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை சுமார் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று குதிரை வண்டியில் அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய திருநாவுக்கரசர் மக்கள் பணிகள் எதுவாக இருந்தாலும் அந்தந்த பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள்தான் முதலில் நின்று உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் 8 வழி சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் காட்டு மரங்களை விளை நிலங்களை குன்றுகளை அழித்து சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன. தமிழகத்தில் சாலையே இல்லாத இடங்கள் மற்றும் ஒரு வழிசாலை இரு வழி சாலை ஆகியவற்றை மேம்படுத்தலாம்.

ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷன் பெற ஒரு சிலரிடம் காண்ட்ராக்ட் கொடுத்து 10 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்கும் பெயரில் மக்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது. போராடும் மக்களை கைது செய்வது பாசிச நடவடிக்கை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மக்கள் தொகைக் கேற்ப காவலர்களை நியமித்து அவர்கள் பணியாற்ற சுதந்திரம் தந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாதனை புத்தகத்தை திருநாவுக்கரசர் வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பிரின்ஸ் தேவசகாயம், மாவட்ட பொருளாளர் சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #chennaisalem8wayproject

Tags:    

Similar News