செய்திகள்

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-06-25 13:56 GMT   |   Update On 2018-06-25 13:56 GMT
கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதால் அவரை மீட்டுதரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் அளிப்பார்கள்.

இன்றும் குறைதீர்க்கும் முகாமிற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று காலை 10.30 மணிக்கு 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தனது 9 வயது மகளுடன் கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார். அவர் மனு கொடுக்க வரிசையில் காத்திருந்தார்.

அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை மகள் மற்றும் தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.

இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து செயல் பட்டு தீக்குளிப்பதை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தாய், மகள் எதற்காக தற்கொலைக்கு முயன்றனர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் எம்.புதுப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி, அவரது மகள் காவியா ஆகியோர் தீக்குளிக்க முயற்சித்தது தெரியவந்தது.

மகேஸ்வரியின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவரை மீட்டுத்தரக்கோரி மகேஸ்வரி, மகளுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.

Tags:    

Similar News