செய்திகள்

இல.கணேசனுக்கு ம.பொ.சி. விருது - அமைச்சர் பாண்டியராஜன் வழங்குகிறார்

Published On 2018-06-25 10:52 GMT   |   Update On 2018-06-25 10:52 GMT
இல.கணேசனுக்கு ம.பொ.சி. விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்குகிறார்

சென்னை:

ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்த்தாயின் தவப்பு தலைவர், எல்லைகளையெல்லாம் மீட்டு புதிய தமிழகம் படைத்த போராட்ட வீரர், விடுதலை போராட்ட வீரர் என நாட்டிற்காக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. செய்த தியாகங்கள் அளவிட முடியாதது. ம.பொ.சி.யின் 113-வது பிறந்த நாள் நாளை 26-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.

எங்களுடைய சிலம்புச் செல்வர் டாக்டர் பத்மஸ்ரீ ம.பொ.சி. அறக்கட்டளை சார்பில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு தியாகராயநகர் போக் சாலையில் அமைந்தள்ள ம.பொ.சி.யின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அரங்கத்தில் இல.கணேசன் எம்.பி. தலைமையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.-ஒரு பன்முக பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

இதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் இல.கணேசன் எம்.பி., இளங்கோகுமனன், குடத்தை மாலி ஆகியோருக்கு 2018-ம் ஆண்டு ம.பொ.சி. விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ம.பொ.சி.யின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாளை காலை நடக்கும் கருத்தரங்கை தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். ம.பொ.சி. பற்றி கல்வியாளர் வ.வே.சு, திருப்பூர் கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகிறார்கள்.

விழா ஏற்பாடுகளை மாதவி பாஸ்கரன், செந்தில் ம.பொ.சி. செய்துள்ளனர். #Tamilnews

Tags:    

Similar News