செய்திகள்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் மையம் - முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2018-06-25 06:46 GMT   |   Update On 2018-06-26 02:46 GMT
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் “சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” நிறுவப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்தார். #TNAssembly #EdappadiPalaniswami
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று பேரவை விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். நடப்பாண்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய அறிவிப்புகள் வருமாறு:-

இன்றைய காலகட்டத்தில், வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படுகின்ற தொற்றா நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த “சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்” செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில்
50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

இங்கு பட்டப் படிப்பு பிரிவு, பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இங்கே இயற்கையான சூழ்நிலையில், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறைகளான யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபங்க்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #EdappadiPalaniswami

Tags:    

Similar News