செய்திகள்

கொள்கை முடிவின் படியே ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை - தமிழக அரசு பதில்

Published On 2018-06-22 13:22 IST   |   Update On 2018-06-22 14:20:00 IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக பிறப்பிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் இன்று பதில் தாக்கல் செய்துள்ளது. #SterliteProtest
மதுரை:

தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அந்த ஆலையை மூட  வேண்டும் எனவும் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் தீவிரமடைந்த போது, அதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.



இந்த அரசாணை அவசரகதியில் இயற்றப்பட்டது என்றும், முறையாக அரசாணை பிறப்பிக்கப்படவேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியது. மேலும், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு பின்னர் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்த தமிழக அரசு, கொள்கை முடிவு எடுக்கப்பட்டுதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவே அரசாணை வெளியிடப்பட்டது என்றும் பதிலளித்தது. தமிழக அரசின் இந்த பதிலை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கை முடித்துவைத்தது. #SterliteProtest
Tags:    

Similar News