செய்திகள்

கட்-அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைப்பதை தவிர்க்க வேண்டும்: தலைமை கழகம் அறிவிப்பு

Published On 2018-06-19 10:08 GMT   |   Update On 2018-06-19 10:08 GMT
தி.மு.க. நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சென்னை:

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலோ, அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளிலோ பேனர்கள், கட்-அவுட்கள், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்கள் செய்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்றும், எந்த வகையிலும் பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் ஏற்படுத்தக் கூடாதென்றும், கழகச் செயல் தலைவர் பொறுப்பேற்ற நேரத்திலேயே கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதைக் கழகத்தில் பல நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் முறையாகக் கடைப்பிடித்து வந்தாலும், ஒரு சில நிர்வாகிகள் ஆர்வ வேகத்தின் காரணமாக அந்த அறிவுரையைக் கடைப்பிடிப்பதில்லை என்பது, அண்மையில் கழகச் செயல் தலைவர் பங்கேற்ற அண்ணாநகர் பொதுக்கூட்டம் தொடர்பாக வெளிவந்த செய்திகள் வாயிலாகத் தெரிய வருகிறது.

இந்த செய்திகளைப் படித்தவுடன் கழகச் செயல் தலைவர், சம்பந்தப்பட்ட கழக நிர்வாகிகளை அழைத்து, பாதிக்கப்பட்ட நடைபாதைகளை உடனடியாகப் பழுது பார்த்து முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவந்து சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அவர்களும் அப்பணிகளைச் செவ்வனே செய்து முடித்து உள்ளனர்.

ஆகவே கழகச் செயல் தலைவர் ஏற்கனவே விரும்பி வெளிப்படுத்தியவாறு, கழக நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்களை அளவின்றிச் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கழக நிகழ்ச்சி குறித்து முக்கியமான ஓரிரு இடங்களில் விளம்பரம் செய்தாலே போதுமானது. இந்த அறிவுரைகள் மீறப்படாமல் பின்பற்றப்படுவதை கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin
Tags:    

Similar News