செய்திகள்

முதியோருக்கு உதவும் கோவை போலீஸ்

Published On 2018-06-19 05:25 GMT   |   Update On 2018-06-19 05:25 GMT
முதியோர்களை கவனிக்கவும், பராமரிக்கவும் ‘ஹலோ திட்டம்’ என்ற புதிய மனிதநேய திட்டத்தை கோவை போலீசார் ஏற்படுத்தி இருக்கிறார்கள். #HelloPlan
கோவை:

ஹலோ...

பாட்டிம்மா..

யாருப்பா...?

போலீஸ், பாட்டி!

போலீசா....?

பயப்படாதீங்க பாட்டி! உங்களுக்கு உதவி செய்யத்தான் பேசுறேன். இனி தினமும் இப்படி பேசுவேன். பக்கத்தில் புள்ள இல்லைன்னு கவலைப்படாதீங்க. உங்க பிள்ளை மாதிரி என்னை நெனச்சுக்குங்க! என்ன உதவி வேணுமின்னாலும் கேளுங்க...

என்ன தம்பி ஆச்சரியமா இருக்கு. போலீசுங்கிறே... எனக்கு உதவி செய்யப் போவதா சொல்றே...

நிஜம்தான் பாட்டி, உங்களைப் போல் ஆதரவு இல்லாம இருப்பவர்களுக்கு உதவி செய்கிறோம்.

கேக்கவே சந்தோ‌ஷமா இருக்குப்பா. ரொம்ப நன்றிப்பா...!

இப்படி ஒரு உரையாடல் கோவை மாநகரில் பணிபுரியும் போலீசாருக்கு அந்த பகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கும் இடையே நடக்கிறது.


வாழ்க்கையில் முதுமை பருவத்தை அடையும்போது யாரும் திரும்பி பார்ப்பதில்லை. ஏன் பெற்ற பிள்ளைகள் கூட அவர்களை பாரமாக நினைத்து முதியோர் இல்லங்களிலோ அல்லது வீட்டில் தனியாக விட்டு விட்டோ பொருள்தேட சென்று விடுகிறார்கள்.

பராமரிக்க ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கலாம். அவர்களுக்கு அது தேவையில்லை. பக்கத்தில் இருந்து அன்பு காட்டி அரவணைக்க ஒரு அன்புக்கரம் தேவை. அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் பணம்தான் வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களை கவனிக்க மனம் இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளமை, வளமை, சிறப்பு என்று வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து முதுமை என்னும் கடைசி கட்டத்தில் கவனிப்பாரற்று இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை கவனிக்கவும், பராமரிக்கவும் ‘ஹலோ திட்டம்’ என்ற புதிய மனிதநேய திட்டத்தை கோவை போலீசார் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மாவட்டத்தில் நிராதரவாக இருக்கும் முதியோர் பற்றி கணக்கெடுத்து வைத்துள்ளார்கள். 700 பேர் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எண்ணிக்கையை பார்த்ததும் கண்ணீர் வடித்த காவல் அதிகாரியின் மூளையில் உதித்ததுதான் இந்த திட்டம்.


ஒவ்வொரு போலீஸ் நிலைய சரகத்துக்குள் வசிப்பவர்களிடம் அந்த அந்த காவல் நிலைய போலீசார் தினமும் போனில் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

நலம் விசாரிப்பதோடு ஏதேனும் உதவிகள் தேவையா? என்று கேட்டறிந்து உதவுவார்கள். ஒரு மகனாக, பேரனாக மனித நேயத்தோடு முதியவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்கிறார்கள்.

காக்கி சட்டைக்குள் ஈரம் அல்ல. இதயம் இருக்கிறது. அது துயரத்தில் தவிப்பவர்களுக்காக துடிப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

கோவை போலீசுக்கு ஒரு பெரிய “சல்யூட்”. #HelloPlan
Tags:    

Similar News