செய்திகள்

தேவாரம் அருகே விளைநிலங்களை நாசம் செய்த மக்னா யானை

Published On 2018-06-18 11:23 GMT   |   Update On 2018-06-18 11:23 GMT
தேவாரம் அருகே விளைநிலங்களில் புகுந்து மக்னா யானை நாசம் செய்தது.

உத்தமபாளையம்:

தேனி அருகே தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர்.

மேற்குதொடர்ச்சி வனப்பகுதியில் வசித்து வரும் மக்னாயானை அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு புகுந்த மக்னா யானை சோளப்பயிர்களை நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்தனர். இரவு நேரத்தில் தோட்டக்காவலுக்கும் செல்ல அச்சமடைந்தனர்.

இதனால் பெரம்புட்டிஓடை, சாக்கலூத்துமெட்டு பகுதியில் வனத்துறையினர் வெடிவெடித்தும், ஓசைஎழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருந்தபோதும் மக்னா யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தற்போது மீண்டும் இங்குள்ள விளைநிலங்களில் புகுந்து 20 தென்னைமரங்கள் மற்றும் மரவள்ளி கிழங்குகளை சூறையாடிச்சென்றது.

இதைபார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனஅலுவலர் ஜீவனா தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், மக்னா யானையால் தினமும் அவதியடைந்து வருகிறோம். காவலுக்கு செல்லக்கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதேநிலை தொடர்ந்தால் விவசாயம் செய்வது பெரும் சவாலாகிவிடும். எனவே வனத்துறையினர் மக்னா யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News