செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே புதிய சோதனைச்சாவடி: அதிகாரிகள் ஆய்வு

Published On 2018-06-13 06:17 GMT   |   Update On 2018-06-13 06:17 GMT
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே புதிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கும்மிடிப்பூண்டி:

தமிழகத்துடன் வடமாநிலங்களையும், ஆந்திராவையும் இணைக்கும் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடத்தல், எடை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை கண்டறியும் வகையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே தமிழக அரசின் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது.

இது ரூ.137.18 கோடி செலவில் நவீன முறையில் போக்குவரத்து துறை, மதுவிலக்கு, கால்நடை துறை, காவல் துறை, வனத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 6 துறைகளை ஒருங்கிணைத்த சோதனைச்சாவடி ஆகும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்த இந்த சோதனைச்சாவடி, தமிழகஆந்திரா மாநிலங்களுக்கான எல்லையில் அமைந்துள்ளது. இதற்கான முழு பணிகளும் முடிவடைந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சோதனைச்சாவடியில் மது விலக்கு அமலாக்கப்பிரிவுக்கான கட்டிட அமைப்பு, அதனில் ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகள் ஆகியவற்றை மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.

அவருடன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டுகள் அமனாமான், ஷியமளா தேவி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தில்லை நடராசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத், வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது மேற்கண்ட சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு ராஜேஷ்தாஸ் ஆலோசனை வழங்கினார்.

Tags:    

Similar News