செய்திகள்

அன்பு இருக்கும் இடத்தில் மனித நேயம் தழைக்கும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

Published On 2018-06-11 11:04 GMT   |   Update On 2018-06-11 11:04 GMT
அன்பு இருக்கும் இடத்தில் மனித நேயம் தழைக்கும் என்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

சிவகாசி:

சிவகாசி ஷாபாஸ்கான் பள்ளிவாசல் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜஹாங்கீர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

இப்தார் நோன்பு விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கும், உலகம் அமைதியாக வாழ வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது. தூய்மை அடைவதன் மூலம் இறை பற்றும், அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத் தோங்குகிறது.

இதன்மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது. இப்தார் நோன்பு திறப்பு கொடையையும், அன்பையும் பறைசாற்றுகிறது. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனிதநேயம் இருக்கும். எங்கு மனிதநேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும். ஏழ்மை விலகும். நன்மை பெருகும்.

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசலில் நான் 30ஆண்டுகளாக இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றேன். இந்த பள்ளிவாசல் புதுப்பிக்கும் கட்டிடத்திற்கு ஏற்கனவே நிதி உதவி வழங்கியுள்ளேன். தொடர்ந்து நிதி உதவி வழங்குவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமுத்திரம், ஜீவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதுரகிரி, நகர செயலாளர் பாண்டியராஜன் அ.தி.மு.க. நகர செயலாளர் அசன் பதூரூதீன், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News