செய்திகள்

அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்

Published On 2018-06-09 11:28 GMT   |   Update On 2018-06-09 11:28 GMT
அந்தியூர் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையம் ஊராட்சி அண்ணாமடுவு, சித்தி ரெட்டிபாளையம், கந்தாம்பாளையம், காட்டூர், பவானி சாலை ஆகிய பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லை என்று தெரிகிறது.

இதை கண்டித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் இறங்கினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட அவர்கள் ஒன்று திரண்டனர்.

கையில் காலி குடங்களுடன் வந்த அந்தியூர்- பவானி-மேட்டூர் செல்லும் 3 வழிச்சாலையில் அவர்கள் குவிந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் பெண்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் இல்லை. அப்படியே குடிநீர் விநியோகித்தாலும் இரவு 11 மணிக்கு மேல் விநியோகிக்கிறார்கள். அதுவும் வாரத்துக்கு ஒரு முறைதான் வருகிறது.

எனவே 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வட்டார வளர்ச்சி அதிகாரி இங்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. எனினும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews

Tags:    

Similar News