செய்திகள்

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்

Published On 2018-06-08 01:00 GMT   |   Update On 2018-06-08 01:00 GMT
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2007-2008-ம் ஆண்டில் 27,209 என்ற அளவில் இருந்தது. அதன் மூலம் ரூ.2,547.14 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ரூ.8,739.95 கோடி அளவுக்கு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. 2 லட்சத்து 42 ஆயிரத்து 855 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.

உத்யோக் ஆதார் பதிவறிக்கை செயலாக்கத்திற்கு வந்த பிறகு, 2016-2017-ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 அளவுக்கு உயர்ந்தது. முதலீடும் ரூ.36,221.78 கோடி என்ற அளவுக்கு அதிகரித்தது. இதன் மூலம் வேலைவாய்ப்பு 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேருக்கு கிடைத்தது.

2017-2018-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. முதலீட்டின் அளவும் ரூ.25,373.12 கோடி என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொள்கை விளக்க குறிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49,329 எண்ணிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால், வேலைவாய்ப்பை 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் இழந்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News