செய்திகள்

தடைகாலம் அமலில் உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விலை கிடுகிடு உயர்வு

Published On 2018-06-02 10:19 GMT   |   Update On 2018-06-02 10:19 GMT
தமிழகம் முழுவதும் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வருகிற 14-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம்:

ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக கடல் பகுதிகளில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்.15ந் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்தது. ஜூன் 14-ம் தேதி வரை இந்த தடை அமலில் உள்ளது. இதையடுத்து மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இதனால் ராமநாதபுரம், கீழக்கரை மீன் மார்க்கெட்டிற்கு மீன்வரத்து குறைவாக உள்ளது. பற்றாக்குறை உள்ளதால் மீன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சூடை மீன் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையிலும், நகரை மீன் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150 வரையிலும், நண்டு கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.450 வரையிலும், சீலா கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

போதிய அளவு மார்க் கெட்டிற்கு கடல் மீன் வராததால் கண்மாயில் பிடிக்கப்படும் கெழுத்தி, கெண்டை, வளர்ப்பு கட்லா மீன்களை வாங்கி மீன் வியாபாரிகள் விற்கின்றனர். இதனால் இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

விலை உயர்வு, மீன் வரத்துக்குறைவு ஆகிய காரணங்களால் அசைவப் பிரியர்கள் ஆடு, கோழி இறைச்சியை விரும்பி வாங்கி செல்கின்றனர். கடும் விலை உயர்வு காரணமாக ஒரு சில அசைவப் பிரியர்கள் காய்கறி உணவுக்கு மாறத்தொடங்கி விட்டனர். தற்போது காய்கறி விலையும் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News