செய்திகள்

முதலியார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

Published On 2018-06-01 16:35 IST   |   Update On 2018-06-01 16:35:00 IST
முதலியார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

முதலியர்பேட்டை கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரதாப் (வயது 31). இவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி காலை தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு வேலைக்கு வந்தார்.

பின்னர் கடை அருகே மோட்டார் சைக்கிளை பூட்டி விட்டு கடையில் வேலை பார்த்தார். மதியம் 1 மணிக்கு பிரதாப் தனது மோட்டார் சைக்கிளை பார்த்த போது அதை காணாமல் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பிரதாப் முதலியார்பேட்டை போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

அதில், பிரதாப்பின் மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது.அதை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

நேற்று காலை போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட அந்த வாலிபர் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.

அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் புதுவை அருகே ரெட்டிச்சாவடி உடலப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜி (வயது 26) டிரைவர் என்பதும், அவர் செலவுக்கு பணம் இல்லாததால் கள்ளச் சாவி போட்டு பிரதாப்பின் மோட்டார் சைக்கிளை திருடியதாகவும் கூறினார்.

இதையடுத்து ராஜியை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News