செய்திகள்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நரம்பு அழற்சி நோய்க்கு சிகிச்சை- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-05-31 15:14 IST   |   Update On 2018-05-31 15:14:00 IST
சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் நரம்பு அழற்சி நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #TNAssembly #TNMinister #Vijayabaskar
சென்னை:

சென்னை அரசு பொது மருத்துவமனையில் உலக நரம்பு அழற்சி நோய் தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆரஞ்சு நிற பலூன்களை பறக்க விட்டு, உலக நரம்பு அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் தூதுவர்களை கவுரவப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், உலக நரம்பு அழற்சி நோய் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியில் உள்ள நரம்பு செல்களில் ஏற்படும் அழற்சி நோயாகும். இந்நோயினால் பார்வை இழப்பு, பார்வை இரண்டாகத் தெரிவது, கைகால் செயலிழப்பு, உணர்வின்மை, நடை தள்ளாட்டம், பேச்சுப் பிரச்சனைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை தொந்தரவுகள், போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நோய் எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும் குறிப்பாக 20-50 வயது வரை உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது.

உலக அளவில் சுமார் 23,00,000 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், ஆண்டுதோறும் 1,00,000 பேரில் 20 பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு முதல் இதுவரை 853 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் இந்நோய்க்கு முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சைக்கு இதுவரை ரூ.2.3 கோடி மதிப்புள்ள மருந்துகள் நரம்பியல் துறையால் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு ஒரு நோயாளிக்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இச்சிகிச்சைக்காக செலவிடுகிறது என்றார். #TNAssembly #TNMinister #Vijayabaskar
Tags:    

Similar News