செய்திகள்

சொந்த ஊரில் காடுவெட்டி குருவுக்கு மணி மண்டபம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

Published On 2018-05-31 04:24 GMT   |   Update On 2018-05-31 04:24 GMT
காடுவெட்டி குருவுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடமும், மணி மண்டபமும் கட்டப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.#AnbumaniRamadoss
சேதராப்பட்டு:

மறைந்த வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான காடு வெட்டி குருவுக்கு நினை வேந்தல் நிகழ்ச்சி பா.ம.க. சார்பில் புதுவை அருகே உள்ள பட்டானூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில், ராமதாஸ், காடுவெட்டி குருவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருக்கமாக கவிதை வாசித்தார். இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது:-

குருவை நான் எனது மூத்த சகோதரராக பாவித்து வந்தேன். கட்சியில் அதிக நாட்டம் கொண்டு செயல்பட்டதால் குரு தனது உடல்நலத்தை சரியாக கவனிக்கவில்லை.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் அமெரிக்காவில் உள்ள டாக்டர்களின் ஆலோசனைகளை எல்லாம் பெற்று சிகிச்சை அளித்தனர்.

அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என நினைத்தோம். ஆனால், வெளிநாடு செல்லும் அளவுக்கு அவரது உடல் நிலை ஒத்துழைப்பு தரவில்லை.

ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரி சிகிச்சைகள் எல்லாம் அளிக்கப்பட்டதோ அதே போல் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரை உயிருடன் மீட்டு வர முடியவில்லை.

நினைவேந்தல் கூட்டத்தில் ராமதாஸ், ஜி.கே. மணி, அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற காட்சி

அவரை இழந்ததால் எனது சொந்த சகோதரனை இழந்த உணர்வில் இருக்கிறேன். குருவை வன்னியர் சங்க தலைவராக பார்த்து விட்டு அந்த இடத்தில் இன்னொருவரை நினைத்து பார்க்க முடியவில்லை. எனவே, அந்த பதவியை நிரந்தரமாக குருவுக்கு விட்டு விட்டு 2 அல்லது 3 செயலாளர்களை நியமித்து வன்னியர் சங்கத்தை வழி நடத்தலாம்.

காடுவெட்டி குருவுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடமும், மணி மண்டபமும் கட்டப்படும். கோனேரி குப்பத்தில் உள்ள கல்லூரியில் அவருக்கு சிலை அமைக்கப்படும். அங்கு அமைய உள்ள புதிய சட்டக்கல்லூரி வளாகத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #AnbumaniRamadoss
Tags:    

Similar News