செய்திகள்

எரியோடு அருகே கருங்கல் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2018-05-30 12:17 GMT   |   Update On 2018-05-30 12:17 GMT
எரியோடு அருகே உள்ள கருங்கல் தடுப்பணையை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

எரியோடு:

எரியோடு அருகே நாகையகோட்டை ஊராட்சி வைவேஸ் புரத்தில் கிழக்கு கருங்கல் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையானது 1986-ம் ஆண்டு கட்டப்பட்டது. 6 ஏக்கர் 97 செண்ட் பரப்பளவு கொண்டது.

இதற்கு அருகில் உள்ள தொப்பையசாமி மலையில் இருந்து நீர் வருகிறது. இந்த தடுப்பணை மூலம் சுற்றியுள்ள 400-க்கும் மேற்பட்ட கிணறுகள் மூலம் விவசாயிகள்பாசனம் செய்து வருகின்றனர். தற்போது தடுப்பணையானது சேதம் அடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் கூறினர்.

இதையடுத்து கடந்த ஆண்டு கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வந்து பார்வையிட்டு சீரமைப்பதாக கூறி சென்றனர். ஆனால் அதன்பிறகும் அதிகாரிகள் சீரமைக்காததால் தடுப்பணையில் தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி அருகில் உள்ள குளத்தில் கலக்கிறது.

இதனால் கோடை மழை பெய்தும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News