செய்திகள்

5 நாட்களில் மெட்ரோ ரெயிலில் 6½ லட்சம் பயணிகள் இலவச பயணம்- இன்று முதல் மீண்டும் கட்டணம்

Published On 2018-05-30 05:58 GMT   |   Update On 2018-05-30 05:58 GMT
சென்னை மெட்ரோ ரெயிலில் 5 நாட்களில் சுமார் 6½ லட்சம் பயணிகள் இலவசமாக பயணம் செய்துள்ள நிலையில் இன்று முதல் மீண்டும் கட்டண பயணம் செயல்படுத்தப்பட்டது. #MetroTrain #ChennaiMetro
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் பயணத்தை பயணிகளிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச பயண அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது.

மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக இருந்ததால் ஏழை, நடுத்தர மக்கள் அதில் பயணம் செய்ய தயங்கிய நிலையில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டதையொட்டி கூட்டம் அலை மோதியது.

முதலில் 3 நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் ஆர்வத்தை பார்த்து மேலும் 2 நாட்களுக்கு சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டது. குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மெட்ரோ ரெயிலில் சொகுசு பயணத்தை அனுபவிக்க திரண்டனர்.

சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை குடும்பமாக பயணம் செய்து நேரத்தை செலவிட்டனர். விடுமுறை நாட்கள் தவிர வேலை நாட்களில் கூட இலவச பயணம் நீட்டிக்கப்பட்டதால் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், கம்பெனிகளில் வேலை செய்பவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பலரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

5 நாட்களில் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரெயிலில் உள்ள வசதிகள், பாதுகாப்பு, இணைப்பு போக்குவரத்து வசதி, நேரம் மிச்சப்படுதல் போன்றவற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இலவச பயணம் அறி விக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் மெட்ரோ ரெயிலில் கட்டணம் கொடுத்து வழக்கமாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை உயரும் என்ற எதிர்பார்ப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

5 நாட்கள் இலவச பயணத்திற்கு பிறகு இன்று மீண்டும் கட்டண பயணம் செயல்படுத்தப்பட்டது. இன்று எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை மெட்ரோ நிர்வாகம் கணக்கெடுக்கிறது. இலவச பயணம் மூலம் விழிப்புணர்வு பெற்று பயணிகள் மெட்ரோ ரெயிலை அதிகம் பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்கிறார்கள்.

மெட்ரோ ரெயிலில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ஆகவும் அதிகபட்சமாக ரூ.70 ஆகவும் உள்ளது. திட்டச் செலவு, பராமரிப்பு செலவு ஆகியவற்றை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது மற்ற நகரங்களை விட அதிகமாக இருப்பதாகவும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் கட்டணத்தை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் திட்டம் முழுமையாக பயன்பட்டிற்கு வரும் போது பயணிகள் எண்ணிக்கை உயரும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

பயணிகள் எண்ணிக்கை உயரும் போது தான் மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகையை சரி செய்ய முடியும். கட்டணத்தை குறைத்து வருவாயை பெருக்குவதே சிறந்த வணிக யுக்தியாகும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். #MetroTrain #ChennaiMetro
Tags:    

Similar News