செய்திகள்
சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த பெண்கள் கைது
சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் புதுமனை 5-ம் தெருவை சேர்ந்தவர் அப்துல்லா மனைவி பாத்திமா (25). இவர் நேற்று வெளியூர் செல்வதற்காக சங்கரன்கோவில் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மைக்கேல் மனைவி கனி (27), பால்துரை மனைவி வேளாங்கண்ணி (27) ஆகிய இருவரும் பாத்திமாவின் பையில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடி உள்ளனர்.
பின்னர் நைசாக நழுவி செல்ல முயன்றுள்ளனர். தற்செயலாக தனது பையை பார்த்த பாத்திமா அதில் பணம் இல்லாததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் தப்பி செல்ல முயன்ற இருவரையும் சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிடித்துள்ளார்.
தொடர்ந்து அவர்களை சங்கரன்கோவில் டவுண் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.