செய்திகள்

சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-05-28 10:40 GMT   |   Update On 2018-05-28 10:40 GMT
சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட த.வா.க தலைவர் வேல்முருகன், சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உண்மை நிலையை கண்டு அறிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன் இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர் அறிவித்திருந்த நிலையில், திடீரென அவர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார்.

இதனை அடுத்து, அவரை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
Tags:    

Similar News