கண்ணகி நகரில் பெயிண்டர் குத்திக் கொலை
சோழிங்கநல்லூர்:
சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது23). பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 6 வருடங்களாக அதே பகுதியில் வசித்து வந்தார்.
சென்னை காரப்பாக்கத்தில் 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் விமல் பங்கேற்றார். அப்போது கண்ணகி நகரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் ஆட்டம் போட்டனர். அப்போது விமலுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
நேற்று இரவு 8.30 மணியளவில் விமல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரை மது அருந்தலாம் என்று எழுப்பிச் சென்றார். இருவரும் அங்குள்ள ஏரிக் கரை பகுதிக்கு சென்றனர்.
அப்போது திருமண வீட்டில் நடந்த மோதல் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் விமல் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விமல் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகிறார்கள். #tamilnews