செய்திகள்

25 நாட்கள் வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது

Published On 2018-05-28 05:01 GMT   |   Update On 2018-05-28 05:01 GMT
25 நாட்களாக வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இனி வெப்பத்தின் தாக்கம் குறையும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். #kathiriVeyil #AgniNatchathiram
சென்னை:

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்த தொடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. பகலில் வெப்பத்தினாலும், இரவில் புழுக்கத்தினாலும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

கத்திரி வெயில் காலத்தில் சென்னை, வேலூர், திருத்தணி, கரூர், பரமத்தி உள்ளிட்ட பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது.

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்பட்டது. நேற்று திருத்தணியில் 103 டிகிரி வெயிலும், வேலூரில் 100 டிகிரி வெயிலும் பதிவானது.

25 நாட்களாக வாட்டி வதைத்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இனி வெப்பத்தின் தாக்கம் குறையும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


கத்திரி வெயில் முடிவடைவது தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

கத்திரி வெயிலுக்கும், வானிலை ஆய்வு மையத்துக்கும் தொடர்பு இல்லை. பஞ்சாங்கத்தின் படியே கத்திரி வெயில் கணிக்கப்படுகிறது. தெற்கு அந்தமானில் தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவ மழை தமிழகத்தை நெருங்கி வரும்போது ஈரப்பத காற்று வீசக்கூடும். அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறையும். கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் வெப்பம் மேலும் குறையும்.

வெப்பச்சலனம் காரணமாக வட உள்தமிழகம் மற்றும் தென் தமிழகம் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #kathiriVeyil #AgniNatchathiram
Tags:    

Similar News