செய்திகள்

திண்டுக்கல் அருகே இடி- மின்னலுக்கு சேதமான வீடுகள்

Published On 2018-05-25 18:13 IST   |   Update On 2018-05-25 18:13:00 IST
திண்டுக்கல் அருகே நேற்று இரவு மழை பெய்தபோது இடி விழுந்து 2 வீடுகள் சேதமானது.

சின்னாளபட்டி:

திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் மழை பெய்யும் சமயங்களில் வீடுகளுக்குள்ளே முடங்கி விடுகின்றனர்.

மழை பெய்ய ஆரம்பித்தவுடன் மின் இணைப்பும் துண்டிக்கபடுவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். நேற்று மாலை சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

அம்பாத்துரையில் ஜவுளி வியாபாரி மோகன்ராஜ், அருகில் வசிக்கும் கோழிக்கடை மாணிக்கம் ஆகிய 2 பேர் வீடுகளிலும் இடி விழுந்தது. அந்த சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்களே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது இருவரது வீடுகளின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

மேலும் மின் இணைப்புகள் அனைத்தும் தீ பிடித்து எரியத் தொடங்கியது. கட்டில்கள் மற்றும் ஆடைகளில் தீ பிடிக்க தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்தவாறு வெளியே ஓடிவந்தனர்.

வீட்டில் உள்ள பொருட்களும் சிதறி ஓடியதுடன் மிகப்பெரிய பள்ளம் உண்டானது. இடி விழுந்தால் என்ன ஆகும் என்பது குறித்து அப்பகுதி மக்களுக்கு நேற்று கண்கூடாக தெரியவந்தது. மழை பெய்த நேரத்தில் மின்சாரம் இருந்ததால்தான் மின் சாதனங்கள் எரிந்துள்ளதாக மின்வாரிய ஊயர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News