செய்திகள்
தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் ஒரு அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பியோடினர். #ThoothukudiPoliceFiring #SterliteKillings
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் அடைக்கப்பட்டு பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிறிய வாகனங்கள் கூட ஓடாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெளி மாவட்டங்களில் இருந்து போலீஸ் படை வர வழைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப் படையினரும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் ரோந்து வந்து கண்காணித்தனர். தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.
தற்போது அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு இன்று ஒரளவு அமைதி திரும்பி உள்ளது. மூன்று நாட்களுக்கு பிறகு இன்று கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த இருநாட்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த இணையதளச் சேவை இன்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. தூத்துக்குடியில் மட்டும் இன்னும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதியில் ஒரு அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பியோடினர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. #ThoothukudiPoliceFiring #SterliteKillings