திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைப்பு
திண்டுக்கல்:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. திண்டுக்கல்லில் இன்று காலை குறைந்த அளவு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.
நேரம் செல்ல செல்ல அடைக்கப்பட்டு இருந்த ஒரு சில கடைகளும் மீண்டும் திறக்க ஆரம்பித்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ்நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பழனியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. பஸ்களும் வழக்கம் போல் இயங்கின.
இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக் கோவிலிலும் திருமண குழுவினர் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் முழு அடைப்பு போராட்டம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
சுற்றுலா நகரமான கொடைக்கானலில் பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்கள் திறந்திருந்தன. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்ததால் பாதிப்பு இல்லை.
ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரள வியாபாரிகளும் வந்திருந்தனர்.
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 16 அரசு பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து தினசரி 922 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் இந்த பஸ்கள் இன்றும் இயங்கியது. போராட்டம் காரணமாக அனைத்து போக்குவரத்து கழக பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதே போல் ரெயில் நிலையம், முக்கிய சந்திப்புகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh