செய்திகள்

ஊட்டியில் கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்த கவர்னர் பன்வாரிலால்

Published On 2018-05-23 09:52 GMT   |   Update On 2018-05-23 09:52 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக ஊட்டியில் கலை நிகழ்ச்சிகளை கவர்னர் ரத்து செய்தார். #Thoothukudifiring #TNGovernor #BanwarilalPurohit
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவின் போது ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய கதக் கலை நிகழ்ச்சி தொடங்க இருந்தது.

முன்னதாக அரங்கிற்கு கவர்னரின் குடும்பத்தினர் வந்து இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். கலை நிகழ்ச்சியை தொடங்கி வைக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி ராஜ் பவனில் இருந்து கார் மூலம் பழங்குடியினர் பண்பாட்டு மைய நுழைவு வாயில் பகுதிக்கு வந்து விட்டு காரை விட்டு இறங்காமல் மீண்டும் ராஜ் பவனுக்கு சென்று விட்டார்.

அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இது குறித்து மேடையில் இருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் துயர சம்பவம் நடந்து உள்ளதால் தென்னக பண்பாட்டு மைய தலைவராக உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார் என்றார்.

இதை தொடர்ந்து பண்பாட்டு மையத்துக்கு வந்திருந்தவர்கள் கலைந்து சென்றனர். முன்னதாக மலர் கண்காட்சி நிறைவு விழா முடிந்து கவர்னர் புறப்படும் போது அவரிடம் பத்திரிகையாளர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் இறந்து உள்ளனர். இது குறித்து அரசிடம் என்ன விளக்கம் கேட்டு இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதில் எதுவும் சொல்லாமல் காரில் ஏறி ராஜ் பவன் சென்று விட்டார். #Thoothukudifiring #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News