செய்திகள்

மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறுகிறது- பழனிசாமி பங்கேற்பு

Published On 2018-05-18 02:49 GMT   |   Update On 2018-05-18 02:49 GMT
மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இம்மாத இறுதியில் நடக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் கலந்து கொள்கிறார்.#Chennai #Metro #EdappadiPalanisamy
சென்னை:

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளில் சுரங்கப்பாதையில் நிறைவடைந்த பணிகளை பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் ஆய்வு செய்து வருகிறார். கடந்த 14 மற்றும் 15-ந்தேதிகளில் ஷெனாய்நகர் 2-வது வழிப்பாதை மற்றும் நேரு பூங்கா- எழும்பூர் இடையிலான பணிகளை ஆய்வு செய்தார். இந்த பாதையில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்வது உள்ளிட்ட சில ஆலோசனைகளை பாதுகாப்பு ஆணையர் கூறினார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பாதுகாப்பு ஆணையர் டிராலியில் சென்று ஆய்வு செய்கிறார். தொடர்ந்து மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சோதனை செய்கிறார். இந்தபணி 2 நாட்கள் நடக்கிறது. இதனை தொடர்ந்து 19-ந்தேதி (சனிக்கிழமை) ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு பாதுகாப்பு ஆணையர் பெங்களூரு திரும்ப இருக்கிறார்.

பாதுகாப்பு ஆணையர் ஆய்வுப் பணியை முடித்துவிட்ட பிறகு, பயணிகள் ரெயிலை முறைப்படி இயக்குவதற்கான ஆய்வு அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனை தொடர்ந்து நேரு பூங்கா- சென்டிரல் மற்றும் சின்னமலை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்து இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதற்கான விழா எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடைபெறும்.



இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை மந்திரி (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவார்கள்.

29-ந்தேதி பவுர்ணமியாக இருப்பதால் அன்று மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். #Chennai #Metro #EdappadiPalanisamy
Tags:    

Similar News